கடந்த ஒருவார காலமாக நடைபெற்றுவந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவுபெற்றது. இதில் கடைசி நாளான நேற்று ஏராளமானோர் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு பரிசீலனை - அதிமுக அமமுகவினர் தள்ளுமுள்ளு
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு பரிசீலனையின்போது அதிமுக-அமமுக கட்சியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட ஒத்த ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முருகன் என்பவருக்கு இரண்டு இடங்களில் வாக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்கக் கோரி அமமுக தரப்பினர் அலுவலர்களிடம் முறையிட்டனர்.
தொடர்ந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று இரு பிரிவினரிடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்தனர்.