தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை,மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபென் இன்று மதுரையில் வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்," தூத்துக்குடியில் நடந்த படுகொலை சம்பவம் தொடர்பாக 14 பேரின் குடும்பத்திற்கு மரியாதை செய்யும் விதமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை சந்தித்து அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று இந்த அறிக்கை தயாரிக்கபட்டுள்ளது. 13 தொகுப்புகளையும், 71 பக்கங்களையும் கொண்ட இந்த அறிக்கையை, ஆன்லைன் மூலமாகவும் மக்கள் பாக்கும்படியான வசதி செய்யபட்டுள்ளது. இறந்த பலரின் குடும்பங்களுக்கு இன்னும் நிவாரண தொகை முழுமையாக கிடைக்கவில்லை.
இறந்த குடும்பத்திற்கு அரசு வேலை தருவதாகக் கூறி பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தலையாரி பணி வழங்கி உள்ளனர். அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் கொள்கை முடிவு எடுக்கவேண்டும் என கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் வாழ சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க வேண்டும் என நினைத்த அனைவரையும் பயங்கரவாதிகள் என கூறியுள்ளார்கள். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை முதலமைச்சர் இன்று வரை நேரில் சென்று பார்க்கவில்லை. எனவே அவர் இதற்காக மன்னிப்பு தெரிவிக்க வேண்டும்.