மதுரை: கரூர் புஞ்சைபுகழூரைச் சேர்ந்த திருமலை என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில்," நான் பொறியியல் பட்டதாரி. SC பிரிவை சேர்ந்தவர். தற்போது புகழூர் நகர் பஞ்சாயத்தும், காகிதபுரம் டவுன் பஞ்சாயத்தும் இணைக்கப்பட்டு புகழூர் நகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சியில் 40 விழுக்காடு மக்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். 1996ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல்களில் பொதுப் பிரிவை சேர்ந்தவர்களே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு ஏதும் வழங்கப்படவில்லை. பஞ்சாயத்து ராஜ் விதிகளின்படி அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆகவே, புகழூர் நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு என இட ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்க கோரி மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியில், பஞ்சாயத்துராஜ் சட்ட விதிகளின்படி உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் இந்தியை தவிர வேறு பல மொழிகளும் உள்ளன - தலைமை நீதிபதி அமர்வு