தென்னிந்தியாவின் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்கக்கூடிய மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பெட் சிடி ஸ்கேன் வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக மதுரையில் புற்றுநோய்க்கான இலவச ஸ்கேன் வசதி!
மதுரை: தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கான ஸ்கேன் வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிமுகம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் வனிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பெட் ஸ்கேன் சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். தென் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாநில அரசு மருத்துவமனையில் புற்றுநோயை துல்லியமாகக் கண்டுபிடிக்க பெட் ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.