தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2020, 11:48 PM IST

ETV Bharat / state

விசாரணையால் தற்கொலை: போராட்டத்திற்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி

மதுரை: பேரையூரில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர், தற்கொலை செய்துகொண்டதற்காக நியாயம் கேட்டு போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

hc
hc

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா செல்லாயி கூடத்தைச் சேர்ந்த கணபதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “நான் மக்கள் விடுதலைக் கட்சியின் செயலாளராக உள்ளேன். கடந்த சில நாள்களுக்கு முன்பு எங்கள் பகுதியைச் சேர்ந்த இதயக்கனி என்பவர் உள்ளூரைச் சேர்ந்த பெண் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இதில் பெண் வீட்டார் கொடுத்த புகாரின்பேரில் இதயக்கனியின் தம்பியான ரமேஷ் என்பவரை பேரையூர் காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இந்த நிலையில் கடந்த செப். 17ஆம் தேதி ரமேஷ் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதில் காவல் துறையினர் சித்திரவதை செய்ததாலேயே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

எனவே இறந்த ரமேஷின் குடும்பத்திற்கும் 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும், அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக பேரையூர் காவல் துறையினரிடம் அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால் அனுமதி மறுத்துள்ளனர்.

ரமேஷின் குடும்பத்திற்கு நியாயம் கிடைப்பதற்கும் மேலும் சிவில் உரிமைச் சட்டப்படி எங்களுக்குப் போராட்டம் நடத்துவதற்கு உரிமை உள்ளது.

எனவே அந்தக் குடும்பத்திற்கு நியாயம் கிடைப்பதற்காக மக்கள் விடுதலைக் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவதற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பேரையூர் கூடுதல் துணை காவல் காண்காணிப்பாளர், பேரையூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் தகுந்த இடைவெளியுடன் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென கூறப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, “144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் சூழ்நிலைகள் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது” எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details