தமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவர், மதுரையில் நிறுவப்பட்டுள்ள உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் 100 கோடி செலவில் தமிழன்னை சிலை நிறுவப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
தற்போது தமிழன்னை சிலை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் என்ற நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது. அந்த நிறுவனம் சிலை அமைக்கும் ஏலத்திற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
அதில் தமிழன்னை சிலையானது தமிழர் மரபை மட்டும் ஒட்டி இருக்காது வர்ணாசிரம வேதகால மரபை ஒட்டி இருக்கும், அத்துடன் அயலார்களின் பண்பாட்டையும் இணைத்து ஒரு கலவை பெண் சிலையாக இருக்கும். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யப்பட்டு, வெளிநாட்டு சிற்பிகளை கொண்டும் சிலை அமைக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இது தமிழர் மரபை மறக்கக் கூடிய வகையிலும், மறைக்கக் கூடிய வகையிலும் உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் துணை போகின்றது. இதனைக் கண்டித்து பல்வேறு தமிழ் அமைப்புகள் கூடி "தமிழன்னை சிலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.
செய்தியாளர்களை சந்தித்த பெ.மணியரசன் தமிழன்னை சிலையை ஒரு வட நாட்டு பெண் சிலை ஆக மாற்றுவதற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புக் கொள்வதை கண்டித்து ஜுன் 17ஆம் தேதியன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். மேலும் பல அறிஞர்கள், வல்லுநர்களைக் கொண்டு தமிழன்னை சிலை ஒன்றை உருவாக்கி அவர்களிடம் கொடுப்பதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்.