தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 1, 2021, 7:29 PM IST

ETV Bharat / state

சாலை மேம்பாடு டெண்டர் அறிவிப்பு ரத்து வழக்கு; தமிழ்நாடு நகராட்சி செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: கன்னியாகுமரியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் 13 பேரூராட்சிகளில் விடப்பட்ட டெண்டரை ரத்துசெய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு நகராட்சி செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 13 பேரூராட்சிகளில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் விடப்பட்ட டெண்டர் சிலருக்குச் சாதகமாக அவசரகதியில் விடப்பட்டுள்ளதாகக் கூறி நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுரேஷ்ராஜன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்செய்தார்.

அதில், “நாகர்கோவில் மண்டலம் கிள்ளியூர், ஏழுதேசம், கல்லுக்கூட்டம் உள்ளிட்ட 13 பேரூராட்சிகளில் சாலை வேலை ஒப்பந்தப் பணிகளுக்காக ரூ.19 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டு ஒப்பந்தம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பத்திரிகையில் வெளியிடப்பட்டு ஒப்பந்தம்செய்யப்பட்டது.

ரூ.2 கோடிக்கு மேல் ஒப்பந்தம்விட 15 நாள்களுக்கு முன்னரே பத்திரிகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தம் ஆறு நாள்களுக்கு முன்னர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த அறிவிப்பு ஒரு சிலருக்குச் சாதகமாக அவசரகதியில் சில அரசு அலுவலர்களால் விடப்பட்டுள்ளது. இதுபோன்று ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்துக்கும் விடப்பட்ட ஒப்பந்த அறிவிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளன.

சாலை மேம்பாட்டிற்கு விடப்பட்டுள்ள டெண்டர் அறிவிப்பில் நடைபெற்ற முறைகேட்டைச் சரிசெய்ய உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் விதிமுறைகளைப் பின்பற்றாமல் விடப்பட்ட, இந்தச் சாலை மேம்பாட்டு ஒப்பந்த அறிவிப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து தமிழ்நாடு நகராட்சி செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 25ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க : ’அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை எதிர்த்துப் போராடுவது ஜனநாயக உரிமை’ - சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details