'ராதா - நாடகத் தடையும் நாடகச் சட்டமும்' என்னும் தலைப்பில் பேராசிரியர் மு. ராமசாமி எழுதிய நூலின் வெளியீட்டு விழா மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
யாதவர் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் இ.கி. ராமசாமி தலைமை வகிக்க, விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் கருணானந்தம் நூலை வெளியிட்டார்.
இவ்விழாவில் ஏற்புரையாற்றிய முனைவர் மு.ராமசாமி, "1954ஆம் ஆண்டு நடிகவேள் எம்.ஆர். ராதாவின் 'வால்மீகி ராமாணம்' என்ற நாடகம் மதுரையிலுள்ள சந்திரா திரையரங்கில் நடைபெற்றபோது வைத்திநாதய்யர் மகன் வை. சங்கரன், விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு, திருச்சி மகாலிங்க அய்யர் உள்ளிட்ட வலதுசாரி சித்தாந்தவாதிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளானது. அவற்றையும் மீறி அந்நாடகம் பொதுமக்களின் ஆதரவோடு நடைபெற்றது.
1876ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சி கொண்டுவந்த நாடகம் நிகழ்த்துதல் தடைச்சட்டத்தின் அடிப்படையில் 'வால்மீகி ராமாயணம்' நாடகத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்று தடை வாங்கினார்கள். ஆனால், எம்.ஆர். ராதா, அரசியலமைப்புச் சட்டம் புதிதாக எழுதப்பட்ட விடுதலைப் பெற்ற இந்தியாவில் வெள்ளையர் கொண்டுவந்த முந்தையச் சட்டம் காலாவதியாகிவிட்டது என வாதத்தை முன்வைத்து வென்றார்.