மதுரை கப்பலூரில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் உள்ள திறந்தவெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை ஆய்வுசெய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "கரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பணிகள், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது.
அதனடிப்படையில் மதுரையில் உள்ள தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த 87 கிராமங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
வாடிப்பட்டியில் 7 நிலையங்கள், அலங்காநல்லூரில் 6 நிலையங்கள், மதுரை கிழக்கு 5 நிலையங்கள் உள்ளிட்ட 87 நெல் கொள்முதல் நிலையங்களில் ஏழாயிரத்து 596 விவசாயிகள் நான்காயிரத்து 629 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்துள்ளனர்.