மதுரை:உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் நின்று போது திடீரென தி விபத்து ஏற்பட்ட நிலையில், தீ விபத்தில் சிக்கி முதியவர்கள் உள்பட 9 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று (ஆகஸ்ட். 26) அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.
சுற்றுலா ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை போடி லயனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ரயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் சமைக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரயிலில் தேநீர் தயாரிக்க முற்பட்ட போது, இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து யாத்திரை பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி உள்ளனர். இதில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், ரயிலை விட்டு கீழே இறங்கி விட்டதாகவும் சிலர் ரயிலில் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.