மதுரை:கடந்த 2012ஆம் ஆண்டு ,மதுரை காவல் துறை சட்டவிரோதமாக ஆறு நாட்கள் காவலில் வைத்து சித்திரவாதை செய்ததால், தனது மகன் சரவணக்குமார் இறந்து போனதாகவும்,அதற்குக் காரணமான மதுரைத் திலகர் திடல் காவல் நிலைய ஆய்வாளர் சீனிவாசன்,உதவி ஆய்வாளர் காஞ்சனா தேவி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி புதிய மீனாட்சி நகரைச் சேர்ந்த ஆறுமுகம்,தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால்,குற்றஞ்சாடப்பட்ட இரு காவல் துறை அலுவலர்களும் தாக்கல் செய்த பதில் மனுவில்,போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக புகார் வந்ததால் தான் சரவணக் குமாரை கைது செய்ததாகவும், சிறையில் அடைக்கும் போது அவருடைய காலில் மட்டும் காயம் இருந்ததாகவும், வேறு எந்த காயங்களும் இல்லை என்றும், மாரடைப்புக் காரணமாகவே அவர் இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.