சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம், மதுரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் விவசாய நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்கவும், விளை பொருட்களை பாதுகாக்க கிடங்கு அமைத்திடவும் கோரி மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேளாண்மை துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் பேடி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், "அரசின் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைந்துள்ளதா? இதன் மூலம் விவசாயிகள் பயனடைந்துள்ளார்களா?" என கேள்வி ஏழுப்பினர்.
இதற்கு முதன்மைச் செயலர், "விவசாயிகளின் நலன் கருதி உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவேற்றம் செய்துள்ளனர். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் வேளாண் கமிஷன் அமைக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என விளக்கம் கேட்டு இந்த விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது - நீதிமன்றம் கேள்வி