பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் டாக்டர் டி.ஜி.வினய், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “கூட்டுறவுத் துறை மூலமாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 1,000 ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தொற்றுக் காரணமாக கூட்டம் கூட கூடாது என்பதற்காக நாளொன்றுக்கு 100 பேருக்கு மட்டும் நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அது காலையில் 50 அட்டைதாரர்களுக்கும் மாலையில் 50 அட்டைதாரர்களுக்கும் என பிரித்து வழங்கப்பட உள்ளது.
நிவாரண உதவித் தொகை யாருக்கும் கிடைக்காது என்ற நிலை இல்லை. சிலர் வெளியூரில் இருந்தாலும் அவர்கள் வந்த பின்பு வாங்கிக் கொள்ளலாம். மேலும் பொது விநியோக பொருள்களும் இலவசமாக கிடைக்கும்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு பொருள்களை வீடு வீடாக விநியோகம் செய்வது போல ரேஷன் பொருட்களை நேரில் சென்று வீடு வீடாக கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
காய்கறிகளை வாங்குவதற்கு மக்கள் சந்தைக்கு செல்லத் தேவையில்லை. வீடுகளைத் தேடி காய்கறிகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.