தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசு பின்பற்றுவது இல்லை” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

பல்வேறு வழக்குகளில் மத்திய அரசு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை. ஆனால் தடை உத்தரவில் உடனடியாக மேல்முறையீடு செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுகளை ஒன்றிய அரசு பின்பற்றுவது இல்லை என உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு.
நீதிமன்ற உத்தரவுகளை ஒன்றிய அரசு பின்பற்றுவது இல்லை என உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு.

By

Published : Jun 2, 2023, 6:54 AM IST

மதுரை: ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், “மத்திய அரசின் சார்பில் வன பாதுகாப்பு திருத்த மசோதா 2023 முன் மொழியப்பட்டு உள்ளது. இதற்கான கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிக்குமாறு கூறப்பட்டு உள்ளது.

இது ஏற்கத்தக்கது இல்லை. இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் கருத்து தெரிவிக்க முடியாது. எனவே மத்திய அரசின் இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்ததில், மத்திய அரசின் வனத் திருத்தப் பாதுகாப்பு மசோதா அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.

இந்த தடை உத்தரவை ரத்து செய்ய மனு தாக்கலுக்கு அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வில் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், ‘மத்திய அரசின் வனப் பாதுகாப்பு சட்ட தடை உத்தரவை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய என்ன அவசரம்?

உயர் நீதிமன்றம் மத்திய அரசிற்கு பல்வேறு வழக்குகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து உள்ளது. அதை நிறைவேற்றுவதில்லை. குறிப்பாக, மதுரையில் கடன் வசூல் தீர்ப்பாயம் பல வருடங்களாக செயல்படாமல் உள்ளது. அதற்கு விசாரணை அதிகாரி நியமனம் செய்ய உத்தரவிட்டும் இதுவரை நிறைவேற்றவில்லை. இது போன்று பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால், நீதிமன்றம் தடை விதித்ததை மட்டும் உடனடியாக விசாரணைக்கு அனுமதிக்க மேல் முறையீடு செய்கிறீர்கள். இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றி விட்டு பிறகு வாருங்கள்” என தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசும், நிதி அமைச்சகமும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது இல்லை என தெரிவித்த நீதிபதிகள் மனு தாக்கல் செய்யுங்கள், திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:வாகன விபத்து - இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details