தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காவலர்களை அச்சுறுத்தும் விவகாரத்தில் மென்மையாக இருக்கப்போவதில்லை' உயர் நீதிமன்ற மதுரை கிளை!

கரோனா நோய்த் தொற்று நெருக்கடியான சூழ்நிலையில், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும் விவகாரங்களில் நீதிமன்றம் மென்மையாக நடந்து கொள்ளாது என, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
madurai highcourt bench

By

Published : Jun 8, 2021, 5:30 PM IST

மதுரை:கரோனா பெருந்தொற்று நெருக்கடியான காலத்தில் ஏற்கனவே காவல்துறையினர் அதிகளவிலான மன அழுத்தத்துடன் பணிபுரிந்துவருகின்றனர் என, நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருச்சி காவல்துறை அலுவலர்கள், கடந்த மே மாதம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெப்பக்குளத்தான் கரைப் பகுதியில் ஐந்து இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல், ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கேள்வி எழுப்பியபோது, அந்த இளைஞர்கள் காவலர்களை கீழே தள்ளிவிட்டதோடு, தாக்கவும் முயன்றனர். இதுதொடர்பான சம்பவத்தில் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி, திருச்சியைச் சேர்ந்த காஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ், ' ஊரடங்கு காலத்தில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல், மனுதாரர் பயணம் செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் கேள்வி எழுப்பிய போது, அவர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.

ஏற்கனவே அதிகளவிலான மன உளைச்சல், அழுத்தத்துடன் காவல்துறையினர் பணி செய்துவருகின்றனர். ஒரு வைரஸ் பலரது உயிரை எடுத்துச் செல்லும் சூழலில், ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். நெருக்கடியான காலத்திலும், காவல்துறையினர் தங்களது பணிகளைச் செய்கிறார்கள். அவர்கள் கேள்வி எழுப்பும்போது, உரிய முறையில் அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

காவல்துறையை துஷ்பிரயோகம் செய்வது, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது ஏற்க இயலாது. இந்த கரோனா நோய்த் தொற்று சூழ்நிலையில், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்கள் அச்சுறுத்தப்படும் விவகாரங்களில், இந்த நீதிமன்றம் மென்மையாக இருக்கப் போவதில்லை.

இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் காவல்துறையினரிடம் நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கோரி, நீதிமன்ற பதிவாளரிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ரூ.10 ஆயிரத்தை மதுரை வழக்கறிஞர்கள் எழுத்தர் கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும் எனக்கூறி, வழக்கை ஜூன் 14ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதுவரை மனுதாரரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details