தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயல் காப்பகம் அமைக்கக்கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு!

ராமநாதபுரம்: கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் புயல் காப்பகம் அமைக்கக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court

By

Published : Sep 22, 2019, 12:21 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களான முள்ளிமுனை, காரங்காடு, சோழியக்குடி, தொண்டி, ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி, பாம்பன் போன்ற ஏராளமான கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஆண்டுதோறும் கடல் சீற்றங்களால் கடுமையான பாதிப்பை சந்தித்துவருகின்றனர்.

கஜா, ஒக்கி, வார்தா போன்ற புயல் வீசியபோது இப்பகுதி மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனர். இந்தக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இன்றளவும், எந்த பாதுகாப்பு வசதியும், அரசால் செய்து தரப்படவில்லை. இந்த பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூண்டில் பாலம் அல்லது கடற்கரை ஓரத்தில் சுற்றுச்சுவர் எழுப்பித் தர வேண்டும். அதேபோல தங்கள் ஊரான மோர்ப்பண்ணையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புயல் காப்பக கட்டடம் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதனால் இயற்கை சீற்ற காலங்களில் வயதானவர்கள், குழந்தைகளை தங்கவைக்க இயலவில்லை. எனவே இப்பகுதியில் புதிதாக புயல் காப்பக கட்டடம் கட்டித்தர வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details