தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: சரியான பாடம் கற்பிக்க வேண்டும்- உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி

மதுரை: பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொந்தரவு அளிக்கும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி கூறியுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Jul 24, 2019, 7:11 PM IST

மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றிய அரசுப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் என்ற கருப்பையா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " என் மனைவி ராணி பேரையூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்தார். திருமங்கலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ரவிச்சந்திரன் என் மனைவியுடன் தவறான உறவை ஏற்படுத்தினார். இதனால், ராணி 3.9.2013ல் தற்கொலை செய்துகொண்டார். என் மனைவி மரணத்துக்கு ரவிச்சந்திரன்தான் காரணம். ஆனால் பேரையூர் காவல் துறையினர் எங்கள் மீதே வழக்குப்பதிவு செய்தனர்.

இதனால் விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தேன். உயர் நீதிமன்றம் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது. ரவிச்சந்திரன் தலையீடு காரணமாக சிபிசிஐடி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பாலியல் கொடுமை தொடர்பான புகார்களை விசாரிக்க அனைத்து அலுவலகங்களிலும் தனி விசாரணைக் குழுக்கள் உள்ளன. எனவே காவல் துறை பாலியல் புகார்களை விசாரிக்கும் குழு ரவிச்சந்திரனிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து அரசு வழக்கறிஞர், ரவிச்சந்திரனை சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவும் தனியாக விசாரித்து வருகிறது என வாதிட்டார்.

தொடர்ந்து, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி, "பணிபுரியும் பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொந்தரவு அளிக்கும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். இதனால் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறை பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் கிருஷ்ணவேணியும் சேர்க்கப்படுகிறார். இந்தக் குழு ரவிச்சந்திரன் மீதுள்ள புகார் தொடர்பான விசாரணையை 2 வாரங்களில் தொடங்கி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மேலும் ரவிச்சந்திரன் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பணிபுரிந்தால் விசாரணை முறையாக நடைபெறாது. எனவே, விசாரணை முடியும் வரை ரவிச்சந்திரனை வேறு மாவட்டத்திற்கு இடம் மாறுதல் செய்து விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details