தேனி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ்யிடம் தேர்தல் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரை-போடி ரயில் பாதை திட்டத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டது. இந்த பணியை எடுத்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒப்பந்ததாரரிடம், உள்ளூர் அமைச்சர் 30 சதவீதம் லஞ்சம் கேட்டதால், பணிகள் கிடப்பில் உள்ளன. தேர்தலில் நான் வெற்றி பெற்றால், இத்திட்டத்தை ஆறு மாதத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியை எடுப்பேன்.
கடந்த சில வருடங்களாக மக்களை சுரண்டுவதையே தொழிலாக கொண்டவர்கள்தான் ஆட்சியில் இருந்துள்ளனர். அவர்கள் மக்களுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. இளங்கோவன் நல்லது செய்வான் என்று என் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதால், இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்.
நடிகனாக பார்த்தால் தேனி மாவட்டத்திற்கு நான் புதியவனாகத்தான் தெரிவேன். அரசியல்வாதியாக பார்த்தால் நூறாண்டு காலம் இந்த தமிழ்ச் சமுகத்திற்காக உழைத்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவன் நான். வெளிப்படையாகச் சொன்னால் சமூக நீதிக்காக போராடிய பெரியாரின் பேரன் நான். எனக்கு புதிய முகம், பழைய முகம் என்பது கிடையாது. ஆனால் ஒரு சிலர் பிஞ்சிலே பழுத்துள்ளனர். நான் மரத்திலே இருந்து இயற்கையாகக் கனிந்தவன்.
மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து என்னால் என்ன செய்ய முடியுமோ அதை தான் நான் வாக்குறுதியாக அளிப்பேன். தேனி மாவட்டத்தை சுற்றுலாத் தலமாக்க பாடுபடுவேன். ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 மற்றும் ரூ.5000 என்று பணம் தருகின்ற வியூகம் எல்லாம் எனக்குத் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் இங்கு இருக்கின்ற மக்கள் எனக்கு நன்கொடை தந்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நான் ஒன்றும் இல்லாதவன் அல்ல. அதேசமயம் லஞ்சத்தால் பெறப்பட்ட கோடிக்கணக்கான பணம் என்னிடம் இல்லை. நான் மக்களை நம்பிதான் வந்திருக்கிறேன்.
மோடியை இந்த நாட்டின் காவலாளி என பாஜகவினர் பரப்புரை செய்து வருவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சில இடங்களில் கூர்க்காவே திருடுவது உண்டு. அது போலத்தான் மோடி தன்னை காவலாளி என்று சொல்லிக்கொண்டு இந்திய மக்களை களவாடிக் கொண்டு இருக்கிறார்,என்றார்.