திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சென்னை செல்லும் முன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், சிஏஏ, என்.ஆர்.சி உள்ளிட்ட பல்வேறு சட்டங்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயம், குறிப்பிட்ட மதத்தவர் பாதித்திருக்கிறார்கள் என்பது அல்ல. முதலில் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தினுடைய இறையாண்மைக்கும், அரசியல் சட்ட எதிர்ப்புக்கும் நடக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு போராட்டம்.
ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் நடக்கக்கூடிய போராட்டம். அதுபோலவே, மதச்சார்பின்மைக்கும் மதச்சார்பின்மையை போக்கக்கூடிய சக்திகளுக்கும் இடையே நடக்கக்கூடிய போராட்டம். அதனால்தான் இவர் தூண்டிவிடுகிறார். அவர் தூண்டிவிடுகிறார் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், தூண்டிவிடுவது சட்டம் கொண்டு வந்தவர்கள் யாரோ, அவர்கள்தான். மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசாங்கம் நிரந்தரமானதாக வரலாறு கிடையாது. வரலாற்றின் பாடங்களை அவர்கள் படிக்க வேண்டும்.
பிடிவாதம் காட்டலாம். எவ்வளவு ஆண்டு காலத்திற்கு பிடிவாதம் காட்ட முடியும். கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் இந்த சட்டம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஜனநாயகத்தின் ஆட்சிகள் மாறும். காட்சிகள் மாறும். இதுதான் மிக முக்கியம். அதை புரிந்து கொள்ள வேண்டும், என்றார்.
தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மத்திய அரசின் திட்டங்களை ஆதரிப்பதும், பின்னர் எதிர்ப்பதுமான நிலைப்பாட்டில் உள்ளதே என்ற கேள்விக்கு, ”தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களை ஆதரிக்கிறது. பின்னர் தமிழ்நாட்டில் இஸ்லாமிய மக்களை ஆதரிப்பது என இரட்டை வேடம் போடுகிறது. அதாவது, தமிழ்நாடு அரசு செயல்பாடு முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை, பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை என்று இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்ய நினைக்கிறது. அங்கே வாக்களித்துவிட்டார்கள்.
அந்த வாக்கினால் தமிழ்நாட்டில் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மிகப்பெரிய தீங்கிழைத்துவிட்டார்கள். இது இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டும் அல்ல. சாதாரணமான குடிமக்கள், மலைவாழ் மக்கள் எல்லாருக்கும்தான். யாராலும் அவருடைய பாட்டன் எங்கு இருந்தார் என கூற முடியாது. இதனால் எல்லா மக்களும் பாதிக்கிறார்கள். இத்திட்டத்தை இன்னும் தொடங்கவில்லை என மோடி சொல்கிறார். ஆனால் குடியரசுத் தலைவர் ஒப்பதல் பெற்று நிறைவேற்றி விட்டார்கள்.
இத்திட்டத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளது. இது ஜனநாயக நாடு. இந்திய அரசியல் சட்டத்தை பிரமாணம் எடுத்துக் கொண்டுதான் எந்த அரசும் நடக்க வேண்டும். மாறாக, அந்த அரசியல் சட்டத்தை போராடுகிறவர்கள் கையிலே கொடுத்து, அரசியல் சட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். போராட்டத்தை எதிர்த்தால் அவர்களை நசுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், அரசியல் சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க: சிஏஏவை வாபஸ் பெறவிட்டால் போராட்டம் தொடரும்! - திருச்சி மைதானத்தில் அதிரும் முழக்கம்