மதுரை:தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நாங்கள் பட்டியல் இன சமூகத்தைச் சார்ந்தவர்கள். எனது இரண்டாவது மகன் சீனி, கடையநல்லூரில் உள்ள இந்து நாடார் உறவின்முறை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் உள்ள ஆசிரியர்களால் எனது மகன் பல இன்னல்களை அனுபவித்து வந்தான்.
பள்ளியில் சாதியப் பாகுபாடா?நாங்கள் பட்டியல் இனத்தைச்சேர்ந்தவர்கள் என்பதால் சில ஆசிரியர்கள் எனது மகனை வேண்டுமென்றே, சாதி ரீதியாக துன்புறுத்தியும் வந்தனர். எனது மகன் கல்வியில் மிகவும் ஆர்வமாக உள்ள மாணவன். ஆசிரியர்களின் சாதி ரீதியான நடவடிக்கை குறித்து ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த அக்.14ஆம் தேதி சில ஆசிரியர்களால் எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ளான். ஆனால், எனது வீட்டில் மகன் தற்கொலை செய்து கொண்டதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது. எனது மகன் உயிரிழப்பில் மர்மம் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் எனது அனுமதி இன்றி எனது மகனின் உடலை உடற்கூராய்வு செய்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தைக் காப்பாற்றும் நோக்கில் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, எனது மகனின் உடலை மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சதிகுமார் சுகுமாரா குரூப் முன்னிலையில் நேற்று (அக்.19) விசாரணைக்கு வந்தது.