திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலவிக்னேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "பாளையங்கோட்டையில் ஏராளமான கல்லூரிகள், மத நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவக் கல்லூரி, சித்தா கல்லூரி, மத்திய சிறைச்சாலை போன்றவை உள்ளன. இதன் காரணமாக ஏராளமான கட்டடங்கள் தொடர்ச்சியாக உள்ளன. இந்தக் கட்டடங்களில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன.
இப்பகுதியில் குறுகலான பாதைகள் உள்ளதாக பல வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
ஆனால், ஏற்கனவே மாநகராட்சியால் தொடர் கட்டடப் பகுதியாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாகவும் அறிவிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் உள்ளூர் திட்ட குழுமம் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நகர்ப்புற திட்ட மற்றும் வடிவமைப்பு இயக்குநரகம் வியாபார நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால், மாநகராட்சியின் தீர்மானத்தை ஏற்று தொடர் கட்டட பகுதியாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாகவும் அறிவித்தால் ஏராளமான வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படாது. அரசுக்கும் வருவாய் ஏற்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியற்ற கட்டடங்களை வரைமுறைப்படுத்த முடியாதவாறு மாநாகராட்சி தீர்மானம் உள்ளது. அனுமதியின்றி பல கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளது. இதைத் தடுக்க மாநாகராட்சி அலுவலகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் தீயணைப்பு வண்டிகூட செல்ல முடியாத அளவுக்கு சாலைக்குப் போதிய இடம் இல்லாமல், கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அனுமதியின்றி கட்டடங்கள் கட்டிவிட்டு, அதன்பிறகு அதை வகைப்படுத்த வேண்டும் என அனுமதி கோருவது ஏற்படையது அல்ல. இது குறித்து அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வணிகர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் - விக்கிரமராஜா கோரிக்கை