மதுரை: வைகை அணையில் இருந்து தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர், மதுரை நகர மக்களுக்காக கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. அது தவிர கோச்சடை, மணலூர் வைகை ஆற்றுப்படுகைகளில் அமைக்கப்பட்ட கிணறுகள் மற்றும் இதர ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 30 மில்லியன் லிட்டர் நீர் பெறப்பட்டு, மதுரை மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னையைச் சார்ந்த காசிமாயன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் உள்ள தனியார் ஒப்பந்த லாரிகள் மற்றும் டிராக்டர் எண்ணிக்கை குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்ட நிதி குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். அதில் பெறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது.
இதன்படி, மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைக்காக, ஒப்பந்த அடிப்படையில் 34 லாரிகள் மற்றும் 33 டிராக்டா்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் லாரிகளும், டிராக்டர்களும் மேற்கொள்ளும் நடை (ட்ரிப்பு) கணக்கில் கொண்டு பணம் வழங்கப்பட்டு வருகிறது.
அதில், மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற நூதன ஊழல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகி உள்ளது. மதுரை மாநகராட்சியின் முதல் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் 8 தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், இருசக்கர வாகன பதிவு எண்ணை, லாரியின் பதிவு எண்ணாக மாநகராட்சியில் பதிவு செய்து, மூன்று ஆண்டுகளில் சுமார் 1 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.