மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களுக்கான நிவாரண உதவித் தொகையாக 7,500 ரூபாயினை வழங்கவேண்டும். மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் இது ஒன்றும் பெரிய தொகை அல்ல.
அதேபோன்று மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாயில், நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1,500 ரூபாய் வழங்கினால், அதிகபட்சமாகவே ஒரு லட்சம் கோடி ரூபாய்தான் செலவாகும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாள்களை 100லிருந்து 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும்.
கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனைகளில் 25 விழுக்காட்டிற்குப் பதிலாக 50 விழுக்காடு படுக்கை வசதிகளை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும்.