மதுரை:தனது வாழ்நாளில் குழந்தைகளுக்காகவே பல்வேறு படைப்புகளை வழங்கியவர் அழ. வள்ளியப்பா. இவர், சற்றேறக்குறைய 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். குழந்தைகளின் படைப்பை ஊக்குவிப்பதற்காகவே கடந்த 1950ஆம் ஆண்டு குழந்தை எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார். குழந்தைகளுக்காகவே வெளியாகி வரும் கோகுலம் இதழின் ஆசிரியராகவும் விளங்கினார். ஆனால், தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கான படைப்பு வெளியாகிறதா? அதற்கான முன்னெடுப்பு எந்த அளவிற்கு உள்ளது? என்பது குறித்து குழந்தை செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குழந்தை இலக்கியம் பிறக்க வேண்டும்
இது குறித்து சிறுவர்களுக்காகவே 12க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்துள்ளதுடன், குழந்தை செயற்பாட்டாளராகவும், மதுரையிலுள்ள திருஞானம் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியராகவும் பணியாற்றும் சரவணன் கூறுகையில், “1950ஆம் ஆண்டு அழ. வள்ளியப்பாவால் உருவாக்கப்பட்ட குழந்தை எழுத்தாளர் சங்கத்திற்குப் பிறகு, கரோனா தொற்றுக் காலத்திற்கு சற்று முன்பாக சென்னையில் மீண்டும் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், அதன் செயல்பாடுகள் இன்னும் முனைப்புடன் இல்லை.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப் பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் குழந்தை இலக்கியத்திற்கான விருதினை அறிவித்துள்ளார். குழந்தைகளைப் படைப்பாளிகளாக்கும் நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது. குழந்தைகளிடமிருந்துதான் குழந்தை இலக்கியம் பிறக்க வேண்டும் என்ற எல்லோரது கனவும் நிறைவேற வாய்ப்புள்ளது. ஆனால், இதுவரை அதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை என்பதுடன், அதற்கான பாடத்திட்டங்களையும் உருவாக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
வாசிப்பு அனுபவம் :தொடக்கப்பள்ளிகளில் எழுத்துக்களைக் கற்பிப்பதும், வாசிக்கக் கற்றுக் கொடுப்பதும்தான் நமது பணியாக உள்ளது. ஆங்காங்கே சில ஆசிரியர்கள் குழந்தைகளைப் படைப்பாளிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாடப்புத்தகங்களைத் தவிர்த்து பிற நூல்களை வாசிப்பதற்கான சூழலை ஆசிரியர்கள் தங்களது வகுப்பறைகளில் உருவாக்க வேண்டும். ஒரு ஆசிரியர் நினைத்தால் குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கிவிட முடியும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு” என்கிறார்.
படைப்பாளிகளாக உருவாகும் குழந்தைகள் இவர், குழந்தைகளின் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு, நாடகம், தெருக்கூத்து, நூல் வாசிப்பு, நூல் விமர்சனம், கள ஆய்வு என பன்முகத்திறமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். தனது பள்ளிக் குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால் நூலைப் பரிசளிப்பதை முக்கியக் கடமையாகக் கொண்டிருக்கிறார். பாடங்களைத் தாண்டிய வாசிப்பு அனுபவமே குழந்தைகளின் சிந்தனையை மெருகூட்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு, சிறுவர்களுக்கான நாவல்கள், யூ டியூப் சேனல்கள் என குழந்தைகளின் படைப்பு வெளியை அவர்களுக்கே அறிமுகம் செய்து வைக்கிறார். குழந்தை எழுத்தாளர்களுக்கான திட்டங்களை தமிழ்நாடு அரசு மேலும் பலவற்றை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார்.
குழந்தைகளுக்கான களம் எங்கே? இது குறித்து மதுரைக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், குழந்தை செயற்பாட்டாளருமான 'கல கல வகுப்பறை' சிவா கூறுகையில், “குழந்தைகள் மீது எல்லோருக்கும் அக்கறை இருக்கிறது. தமிழக சூழலில் வெளியாகின்ற இலக்கியங்கள் அனைத்துமே பெரியவர்களுக்கானதாக உள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கான படைப்பு வெளி குறைவாகவே உள்ளது. குழந்தைகளுக்காக பெரியவர்கள் படைத்தவற்றை குழந்தைகளின் படைப்பாகப் பார்க்கிறோம். குழந்தைகளின் கலைப்படைப்புகளை, ஆற்றலை வளர்ப்பதற்கு முனைப்புக் காட்ட வேண்டும்.
நடனம், ஓவியம், பாடல், விளையாட்டு என அனைத்திலும் போட்டிக்காகவே குழந்தைகளை ஊக்குவித்து வருகிறோம். அவர்களின் கலையார்வத்தை வெளிப்படுத்துவதற்கான களத்தை நாம் உருவாக்கத் தவறி நிற்கிறோம். இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும். குழந்தைகளின் உலகத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கின்ற புதிய மறுமலர்ச்சி உருவாவதே குழந்தைப் படைப்பாளர்கள் உருவாக்கத்திற்கான தோற்றுவாயாக அமையும்.
குழந்தைகளின் உலகம் என்ன?குழந்தையின் பாடப்புத்தகம் என்ன அளவில் இருக்கிறது? அவர்கள் வாசிக்கின்ற குழந்தைகளுக்கான நூல்கள் எந்த அளவில் இருக்கிறது? என்பதில்தான் வேறுபாட்டை உணர முடிகிறது. ஏன் பாடநூல்கள் கதைப்புத்தகங்களாக இல்லை. காரணம் அதற்கான சிந்தனை வறட்சி நிலவுகிறது. இதனை பெரியவர்களாகிய நாம் பேசாமல் படைப்புகளுக்கான சூழலை உருவாக்க முடியாது. நாம் எந்த உயரத்திலிருந்து உலகத்தைப் பார்க்கிறோமோ, அதேபோன்று குழந்தை தன்னுடைய உயரத்திலிருந்து இந்த உலகத்தை பார்க்கிறது. அப்போது அதன் பார்வை எப்படி வேறுபட்டதாக உள்ளது என்பதை உணரத் தவறிவிடுகிறோம்” என்கிறார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “குழந்தைகளுடனான உரையாடல் மிகவும் அவசியம். இது பள்ளி ஆசிரியர்களுக்கே சாத்தியம். குழந்தைகளின் பார்வையிலிருந்து ஓர் உலகம் உருவாவதற்கான சூழலை சாத்தியப்படுத்த வேண்டும். நாம் விரும்புவதையே குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். ஆனால், குழந்தை என்ன விரும்புகிறது என்பதை கவனிக்கத் தவறி விடுகிறோம்” என்றார்.
கனவு நினைவாகுமா? :மேலும், குழந்தைகள் மகிழ்தினி, எஸ்தர்ராணி, தனுஷ் ஆகியோர் கூறுகையில், “எங்கள் பள்ளியில் பாடங்களோடு பல்வேறு வகையான நாவல்கள், நாளேடுகளை நாங்கள் வாசிக்கிறோம். ஆசிரியர் தொடர்ந்து அதனை ஊக்குவிக்கிறார். இதன் மூலம் பல புதிய விடயங்களை நாங்கள் அறிந்துகொள்ள முடிகிறது. எங்களால் நிறைய விடயங்கள் குறித்து முழுமையாக உணர முடிகிறது” என்கின்றனர்.
நாம் காணும் உலகத்தில் குழந்தைகளைப் பொருத்திப் பார்க்கிறோமே தவிர, குழந்தைகள் காணும் உலகத்தில் நம்மைப் பொருத்திக் கொள்வதற்கான எதார்த்தத்தை உணரத் தவறிவிடுகிறோம். தமிழ் இலக்கிய வெளியில் தொடர்ந்து இருந்து வரும் குழந்தை இலக்கியத்திற்கான வெற்றிடத்தை இட்டு நிரப்பும் வகையில் குழந்தைகளை படைப்பாளிகளாக்குவதே, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் கனவாக இருந்தது. அத்தகைய கணவை நாம் நிறைவேற்ற வேண்டிய கடைமையில் இருக்கிறோம் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க:வாயில்லா ஜீவன்களை வாழவைக்கும் ராஜா... யார் இவர்..? - சிறப்புத்தொகுப்பு!