மதுரை நரிமேடு திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (38). இவரது கணவர் பாலமுருகன். இவர் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். விஜயலட்சுமி, தான் குடியிருக்கும் பகுதியில் அமைந்துள்ள சுய உதவி குழுவின் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நரி மேட்டில் உள்ள வங்கியில் சுய உதவி குழு மூலம் பெற்ற பணத்தை டெபாசிட் செய்வதற்காக விஜயலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள், விஜயலட்மியின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
அந்நேரம் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த மதுரை அண்ணாநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அழகுமுத்து, இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்களையும் மிக வேகமாக விரட்டிச் சென்றார். முன்னே சென்ற அந்த இளைஞர்கள் வேகத்தடையால் தடுமாறிக் கீழே விழுந்தனர். இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் காவல்துறையினரிடம் சிக்கினார். தப்பி ஓடிய மற்றொரு இளைஞரான அஜய்யை (22) காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
அதன் பின் அஜயிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அஜய் ஊர்க்காவல் படையில் பணியாற்றுவதும் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் அவர் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து அஜய் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.