கரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா, கடந்தாண்டை போல் இந்தாண்டும் பக்தர்களை அனுமதிக்காமல் கோயில் வளாகத்திலேயே நடத்தத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நிகழாண்டுக்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் புறப்பாடு நடைபெற்றது.
எட்டாம் திருநாளான நேற்று (ஏப்.22) பட்டாபிஷேகத்தன்று காலையில் மீனாட்சி, சுந்தரேசுவரர் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர். இரவு அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடை பெற்றது.
ஒன்பதாம் திருநாளான இன்று (ஏப்.23) திக்கு விஜயம் நடைபெறுகிறது. நாளை (ஏப்.24) காலை திருக்கல்யாணம் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லாததால் வீட்டிலிருந்தபடியே காணும் வகையில் இணையதளங்களில் ஒளிபரப்பப்படுகிறது.
இதையும் படிங்க: அழகர்கோயிலில் தேரோட்டம் நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி!