கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெர்லின் சுஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில்,"2019ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதினேன். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்தேன். தொடர்ந்து 2020-21ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வும் எழுதினேன். தேர்வின் முடிவில் நான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து தேர்வின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் பெறுவதற்காக உயர் அலுவலர்களை அணுகினேன். எவ்வித பதிலும் இல்லாத காரணத்தினால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கின் இறுதியில் நான் எழுதிய தேர்வின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மற்றும் இதர ஆவணங்களை அலுவலர்கள் முன்பு என்னிடம் காட்ட உத்தரவிடப்பட்டது.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் என்னால் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பின்பற்ற முடியவில்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஓ.எம்.ஆர். விடைத்தாளின் நகலை பெற விண்ணப்பித்தேன். அதில் நான் எழுதிய தேர்வுக்கும், எனக்கு அளிக்கப்பட்ட ஓ.எம்.ஆர். விடைத்தாளும் சம்பந்தம் இல்லாத ஒன்றாக இருந்தது.
மேலும் நான் எழுதிய தேர்வின் அசல் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மற்றும் அதற்கான கீ ஆன்சர் ஆகியவை வைத்து எனக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும். அதுவரை மருத்துவ படிப்பிற்கான 2020-21ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பின் சேர்க்கையில் ஒரு இடம் ஒதுக்கி வைக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கோரிக்கை ஏற்கத்தக்கது அல்ல. மேலும் மனுதாரர் தனது மனுவை திரும்ப பெறுவதால் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.