கிருஷ்ணகிரி, ஆவின் பால் ஒன்றியத்தின் மூலமாக நாள்தோறும் விவசாயிகளிடம் இருந்து பல லட்சம் லிட்டர் அளவில் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
முகவர்களின் நிறுவனங்களுக்கு லாரிகள் மூலமாக இந்தப் பால் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகத் தெரிவித்து, விவசாயிகளுக்கு தர வேண்டிய கோடிக்கணக்கான பணத்தை தராமல் நிலுவையில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆவின் நிறுவனத்திடம் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை விவசாயிகள் நடத்தியும், பணம் தொடர்ந்து வழங்கப்படாமலேயே உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சமூக ஆர்வலர் சந்திரமோகன், ”மாட்டுத் தீவனத்தின் விலை உயர்வு, கரோனா தாக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை, ஆவின் நிர்வாகம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனு ஒன்றை அளித்துள்ளார்.
மேலும் ”ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்களுக்கும், பணியாற்றி வரும் சுமார் 479 நபர்களுக்கும் நாள்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இலவசப் பாலை நிறுத்திவிட்டு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டிய நிலுவை பணத்தினை பண்டிகைக் காலத்திற்கு முன்பாக வழங்கிட வேண்டும்” என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.