தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 18 வட்டாரங்களில் சுமார் 4 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் நெல், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி போன்ற வேளாண் பயிர்களும், பீன்ஸ், காளிபிளவர், நூல்கோல், முட்டை கோஸ், தக்காளி, வெண்டை, கத்தரி, கொத்தமல்லி, புதினா போன்ற தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. மண்வளம், தட்ப வெப்பநிலை சாதகமாக உள்ள இம்மாவட்டங்களில் இந்த பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்பொழுது போதுமான அளவுக்கு மழைப்பொழிவு உள்ளதால் கார்த்திகைப் பட்டம் உழவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி விவசாயிகளுக்கு விதைகள், நாற்றுகள் முறையாக தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் விதை விற்பனை நிலையங்கள் செயல்படும் பொருட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த விதை ஆய்வு துணை இயக்குனர் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது விதை விற்பனை செய்யும் பொழுது அரசு விதிமுறைப்படி விதை, ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், விற்பனை விலை ஆகிய விவரங்களை குறிப்பிட்டு விதை விற்பனை நிலையங்கள் மற்றும் நர்சரிகள் ரசீதுகள் வழங்க வேண்டும்.