முதலமைச்சரின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த ஓசூர் மலர் விவசாயிகள்!
கிருஷ்ணகிரி: ஓசூரில் சர்வதேச மலர் விற்பனை மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்ததையடுத்து, அப்பகுதி மலர் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவுக்கு அதிகமாக ரோஜா, ஜெர்பரா, கார்னேசன் உள்ளிட்ட கொய்மலர்கள் (கட் ப்ளவர்ஸ்) சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்கள் கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், காதலர் தினம் உள்ளிட்ட விழா காலங்களில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், சர்வதேச மலர் விற்பனை சந்தை ஓசூரில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மலர் விவசாயிகள், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.