கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த சூளகிரியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் எல்லப்பா. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்திமுகம் பகுதி ஐந்தாம் வார்டில் (பொது வார்டு) அமமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எல்லப்பா வேறொரு ஊராட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அத்திமுகம் ஊராட்சியைச் சேர்ந்த ரகு என்பவர், அவருக்கு முன்மொழிந்து வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.
வேட்புமனுக்கள் மீதான ஆய்வின்போது ரகு, எல்லப்பாவின் வேட்புமனுவை முன்மொழிவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அமமுகவிற்கு சின்னம் ஒதுக்கப்படும் என்று நண்பகல் வரை எல்லப்பா காத்திருந்த வேளையில், திடீரென அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் பாலாஜி கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த எல்லப்பா, தேர்தல் அலுவலரிடம் முறையிட்டபோது, ' பட்டியலினத்தைச் சேர்ந்த நீ, உங்களுக்கான இடங்களில் போட்டியிடாமல் பெரியவர்களை எதிர்த்துப் பொதுத் தொகுதியில் போட்டியிடலாமா' என்று ஒருமையில் பேசியுள்ளார். மேலும் முன்மொழிந்த ரகுவும் மறுப்புக் கடிதம் வழங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் அதிமுகவினர் தலையிடல் இருப்பதாக அறிந்த எல்லப்பா, அமமுக நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனுவை ஏற்குமாறு அலுவலரிடம் முறையிட்டுள்ளார். இதில் அதிர்ச்சி திருப்பமாக, காலை முதல் எல்லப்பாவுக்கு முன்மொழிந்த ரகு, ஆளுங்கட்சியினருடன் நேரில் வந்து, அவரை யாரென்றே தெரியாதென குண்டைப் போட்டுள்ளார்.