கரூர்:தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளது.
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் வெங்கமேடு காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முந்தினம் (மே.13) தீவிர சோதனை மேற்கொண்டர். அப்போது, அருகம்பாளையம் தெற்கு பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் மகன் முருகேசன்(41) என்பவர், தனது வீட்டில் 1714 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததை கண்டறிந்தனர்.அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முருகேசனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல, நேற்று (மே.14) ஆம் தேதி ஒரே நாளில் அரசு அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கரூர் மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா கட்டளை மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு