தமிழ்நாடு

tamil nadu

உரிய பேருந்து வசதி இல்லை - 2 நாட்களாகப் பள்ளி செல்லாமல் மாணவர்கள் போராட்டம்!

By

Published : Oct 28, 2022, 10:38 PM IST

கரூர் அருகே பேருந்து இல்லாத காரணத்தால் 2 நாட்களாக பள்ளிக்குச்செல்லாமல் சீருடை அணிந்து ஊர் மந்தையில் கூடிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேருந்து வசதி இல்லாததால்- 2 நாட்களாக பள்ளி செல்லாமல் மாணவர்கள் போராட்டம்.!!
பேருந்து வசதி இல்லாததால்- 2 நாட்களாக பள்ளி செல்லாமல் மாணவர்கள் போராட்டம்.!!

கரூர்:கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை அருகே வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் இருந்து அருகில் உள்ள வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் தினந்தோறும் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

இந்தப்பகுதியில் இருந்து வெள்ளியணை அரசுப்பள்ளி 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையில் பள்ளிக்குச்செல்லும் மாணவர்கள் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோரிடம் கோரிக்கை அளித்தும் இதுவரை பேருந்து வசதி ஏற்படுத்தித்தரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் அரசுப்பேருந்து வசதி, பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதனிடையே வெள்ளியணையில் இருந்து வீரணம்பட்டி வரை செல்லக்கூடிய தனியார் மினி பேருந்து, போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால் இரண்டு நாட்களாக வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் பள்ளி செல்லப்பேருந்து வசதி இல்லாத காரணத்தினால், கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகளுக்குச் செல்லாமல் 18 மாணவிகள் உள்ளிட்ட 65 மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து ஊர் முன்பு, திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் 48 பேர் சீருடை அணிந்து பள்ளிக்குச்செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பள்ளிக்கல்வித்துறை, கரூர் மாவட்ட கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் கௌரி மற்றும் கரூர் மண்டல போக்குவரத்து துறை அலுவலர்கள் செந்தில்குமார், சுரேஷ், வெள்ளியணை ஊராட்சி மன்றத்தலைவர் வளர்மதி சுப்பிரமணியன் ஆகியோர் பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவதாகவும் இன்று(அக்.28) விடுமுறை எடுக்காமல் பள்ளிக்குச்செல்ல வேண்டும் என்றும் மாணவர்களிடம் வலியுறுத்தினர்.

ஆனால், அதை ஏற்க மறுத்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு தற்காலிகப்பேருந்து வசதி வேண்டாம் எனவும்; நிரந்தரமாக பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுத்தால் மட்டுமே பள்ளிக்குச்செல்வோம் என்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அலுவலர்கள், அரசுப்பேருந்து ஒன்றை இந்த வழித்தடமாக நிரந்தரமாக வருவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தனியார் பள்ளிகள் போட்டி போட்டுக்கொண்டு கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுத்து மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து வரும் நிலையில் வெள்ளியணை அருகே உள்ள அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்குச்செல்லும் ஒரே கிராமத்தைச்சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்குப்பேருந்து வசதி செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் பயனில்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உரிய பேருந்து வசதி இல்லை - 2 நாட்களாக பள்ளி செல்லாமல் மாணவர்கள் போராட்டம்!

மேலும் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த குறைந்தபட்சபேருந்து வசதி கூட ஏற்படுத்தி தராமல் கரூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலர்கள் நீண்ட நாட்களாக அலட்சியம்காட்டி வருவது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்களுக்கு எதிராகப் பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டன - ஆர்.பி. உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details