கரூர்:கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின்கீழ் இயங்கும் ஆசீர்வாதம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் கரூர் மாவட்டம் முழுவதும் அடாவடி வசூல் வேட்டை நடத்தி பொதுமக்களுக்குப் பல்வேறு இடையூறுகளை கொடுத்துவருகின்றனர்.
ஊரடங்கால் வேலை இழப்பு காரணமாக பொருளாதாரச் சிக்கல்களை நடுத்தர குடும்பத்தினர் சந்தித்துவருகின்றனர். சின்ன ஆண்டாங்கோவில் பகுதியைச் சேர்ந்த 10 பேர் கொண்ட மகளிர் குழு ஆசீர்வாதம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திடம் தலா ரூ.50,000 கடன் பெற்றுள்ளனர்.
கடன் தொகைக்கு 26 மாத தவணையாக மாதம் ஒன்றுக்கு ரூ.2,600 வசூல் செய்யப்பட்டுவந்துள்ளது. ஊரடங்கு காரணமாக வேலை இழப்பைச் சந்தித்துள்ள சுய உதவிக்குழு பெண்களிடம் கடந்த மாதம் தவணையைக் கேட்டு நிறுவன ஊழியர்கள் நாள்தோறும் தொந்தரவு அளித்துவருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் குழுவில் உள்ள பெண்கள் தங்கள் நிலையைக் கூறி எடுத்துரைத்துள்ளனர். ஆனாலும் தவணை கட்டவில்லை என்றால் ஒவ்வொருவரும் ரூ.950 வட்டி கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளனர். வட்டி அதிகபட்சமாக உள்ளது என அவர்கள் கேள்வி கேட்டபோது, வாக்குவாதம் செய்வதுடன் அண்டை வீட்டார் முன்னிலையில் அவமானப்படுத்துவதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.