கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, ”கரூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 42 பேர் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், அவர்கள் அனைவரும், குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையிலிருந்து வந்த இரண்டு நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் நபரின் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் வரும் 6 ஆம் தேதி முதல் டெக்ஸ்டைல்ஸ், பேருந்து கட்டுமானத் தொழில் (பஸ்பாடி), கொசுவலை உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் செயல்படவுள்ளன. நகர்ப் புறங்களில் 30 விழுக்காடு வேலை ஆட்களுடனும், ஊரகப் பகுதிகளில் 50 விழுக்காடு வேலை ஆட்களுடன் தகுந்த இடைவெளியுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 50 வயதிற்கு மேல் உள்ள நபர்கள் வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும், காலை துவங்கி மாலை 6 மணிக்குள் தொழிற்சாலைகள் நிறைவடைய வேண்டும் போன்ற விதிமுறைகள் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வர்த்தக நிறுவனத்திற்கு வருபவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டுவருகிறது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:'போக்குவரத்து அனுமதிக்கான பாஸை சென்னை கட்டுப்பாட்டு அறையே வழங்கும்'