கரூர்:கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இரண்டு முக்கிய பேருந்து நிறுத்தங்களில் க.பரமத்தி பேருந்து நிறுத்தமும் ஒன்றாகும். கரூரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தினந்தோறும் கரூர் நகரை நோக்கி டெக்ஸ்டைல் தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், பஸ் பாடி கட்டும் தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வந்து செல்கின்றனர்.
இதே போன்று க.பரமத்தி பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம், க.பரமத்தி காவல் நிலையம், கால்நடை துறை மருத்துவமனை, ஊராட்சி மன்ற அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய இடமாக க.பரமத்தி பேருந்து நிறுத்தம் உள்ளது. கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் தினந்தோறும் கோவை மார்க்கமாகவும், திருப்பூர் வெள்ளகோயில் வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக அரசு பேருந்துகளில் ஒன்-டூ-ஒன் பேருந்துகளை தவிர மற்ற அரசுப் பேருந்துகள் க.பரமத்தி பேருந்து நிறுத்தம் செல்லும் பொதுமக்களை கரூர் பேருந்து நிலையத்தில் ஏற்றுவதில்லை என கூறப்படுகிறது. இதேபோல கோவையில் இருந்து கரூர் நோக்கி வரும் அரசுப் பேருந்துகளில் கோவை பேருந்து நிலையத்தில் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காது என பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளை அனுமதிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 17) மதியம் 12 மணியளவில் கரூர் பேருந்து நிலையத்திலிருந்து க.பரமத்தியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் அரசு பேருந்தில் ஏற முயன்றபோது பேருந்து ஒட்டுநரும், நடத்துநரும் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என கூறியுள்ளார்.