கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சங்ககவுண்டன்பட்டி பகுதியில் உள்ள ஆர்.டி. மலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக அகற்றக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகின்றது. எங்கள் ஊரில் 50 அடியில் இருந்த நீர்மட்டம் இன்று ஆயிரம் அடிக்கும் கீழ் குறைந்துள்ளது.
இதனால், நிலத்தடி நீர்மட்டம் மிகுந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் உப்பு நீரை பயன்படுத்தி வருவதால், உடலில் உப்பு நீர் அதிகமாக கலந்து, சிறுநீரக கோளாறு சம்பந்தமான நோய்கள் தாக்கி உள்ளன.
ஆட்சியரிடம் மனு அளித்த ஊர் மக்கள் காவிரி கூட்டுக்குடிநீர் முற்றிலுமாக கிராமத்திற்கு வரவில்லை. ஆதலால், நிறுவனத்தைத் தடை செய்ய வேண்டும்” எனக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் நான்கு நாள்களில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதிகோரி அரசிடம் மீனவர்கள் மனு