கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு மின்சாரத்துறை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
அதன்படி, தாந்தோன்றிமலை அருகிலுள்ள கோடங்கிபட்டி கிராமத்தில் உள்ள நியாயவிலை கடையில் நடைபெற்ற நிதி வழங்கும் நிகழ்வில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாவட்ட வருவாய் அலுவலர் லியாக்கத் அலி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, "மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் நிவாரண நிதியை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, " கரூர் மாவட்டத்தில் 592 நியாயவிலைக் கடைகளில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 511 குடும்ப அட்டைதாரர்களுக்கு , கரோனா நிவாரண நிதியாக ரூ. 62.30 கோடி வழங்கப்பட உள்ளது. வேலாயுதம்பாளையத்தில் செயல்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டி.என்.பி.எல்.) 250 சிலிண்டர் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முக்கிய உபகரணங்கள் அயல்நாட்டில் இருந்து வர வேண்டியுள்ளதால், அவை வந்தவுடன் ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கப்படும் " என்றார்.