தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துவருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, "நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக ஒரு நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வரவு, செலவு ஆகியவற்றை கணக்கில் வைத்துதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால் இம்முறை அதை எதுவும் கணக்கில் கொண்டதாக தெரியவில்லை. கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய முக்கிய துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக இல்லை.
இரண்டு மணி நேரம் எதுவும் இல்லா வெத்து அறிக்கையை வாசித்தது மட்டுமே நிர்மலா சீதாராமனின் சாதனை. யானை புகுந்த நிலத்தில் என்ற புறநானூறு பாடலை மேற்கோள் காட்ட வேண்டியது மக்கள்தான். மக்களுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மேற்கோள் காட்ட நினைத்திருந்தால், அவர் திருக்குறளைத்தான் மேற்கோள் காட்டியிருக்க வேண்டும், என்றார்.
செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மேலும், அவர் பேசுகையில், "அதேபோல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த அடுத்த நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. எனவே நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கக் கூடாது என உறுதியளிக்குமாறு தமிழ்நாடு எம்பிக்கள் சார்பாக குரல் எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அத்துறை அமைச்சர் மறுத்துவிட்டார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக தொடர்ந்து திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் குரல் கொடுப்போம்" எனவும் அவர் தெரிவித்தார்.