கரூர் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், "கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரவக்குறிச்சியில் 250, கரூரில் 261, கிருஷ்ணராயபுரத்தில் 253, குளித்தலையில் 267 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் ஆயிரத்து 31 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
இந்த வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கரூர் வருவாய் கோட்டாட்சியர், குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஆயிரத்து 500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சவாடி மையங்களையும், வாக்காளர்களின் இருப்பிடத்திலிருந்து இரண்டு கி.மீ. தூரத்திற்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும் பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்கள் மறுவரையறை செய்வது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முறையீடுகள், கோரிக்கைகளை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் வாக்காளர் பதிவு அலவலர்களாகவும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் துணை வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கரூர் தொகுதிக்கு கரூர் வருவாய் கோட்டாட்சியரும், குளித்தலை தொகுதிக்கு சார் ஆட்சியரும், அரவக்குறிச்சி தொகுதிக்கு உதவி ஆணையர் (கலால்), கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் வாக்காளர் பதிவு அலுவலர்களாகச் செயல்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.