கரூர் மாவட்டம் லாலாபேட்டை காவேரி ஆற்றிலிருந்து மதுரை, மேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் சுமார் 340 ஹெச்.பி. மோட்டார் பம்பிங் மூலமாக இங்கிருந்து குடிநீர் செல்கிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்த கூட்டுக் குடிநீர் குழாய் செயல்படுகிறது.
இந்நிலையில், லாலாபேட்டை காவிரி ஆற்றின் கரையிலிருந்து மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிவருகிறது. இதையடுத்து, லாலாபேட்டையில் கரூர் பழைய சாலையோரத்தில் நேற்றிரவு குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சுமார் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து செயற்கை மழைபோல் தண்ணீர் பெய்தது.
இதனால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் கூட்டுக்குடிநீர் பராமரிக்கும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பெயரில் உடனடியாக 340 ஹெச்.பி. மோட்டார் நிறுத்தப்பட்டது.
இருப்பினும், உடைப்பு ஏற்பட்ட குழாயில் தொடர்ந்து இரவுமுதல் தண்ணீர் வெளியேறிவருகிறது. குழாயை சரிசெய்வதற்காக ஆங்காங்கே உள்ள ஏர் வால்வு குழாயில் தண்ணீர் திறந்துவிடுகின்றனர்.