கரூர்:தமிழ்நாட்டில் நேற்று (அக்டோபர் 10) ஐந்தாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை, மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
இதனைத் தொடர்ந்து கரூர் நகராட்சிக்குள்பட்ட செல்லாண்டிபாளையம் கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்கிய அமைச்சர், பொதுமக்களிடம் நலன் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இரண்டாம் இடத்தில் கரூர்
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் ஐந்தாம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஐந்தாம் கட்ட சிறப்பு முகாமில் ஆறு மணி நிலவரப்படி 19 லட்சத்து 98 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மகத்தான வெற்றியாகும். தமிழ்நாட்டில் இதுவரை ஐந்து கோடியே மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதில் 64 விழுக்காடு மக்கள் முதல் தவணை தடுப்பூசியும், 22 விழுக்காடு மக்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதிபெற்றவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 53 ஆயிரத்து 600 பேர். இவர்களில் ஆறு லட்சத்து 22 ஆயிரத்து 921 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது 73 விழுக்காடு ஆகும்.