கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கைக்காய் விவசாயம் அதிகளவில் நடைபெறுகின்றது.
அப்பகுதிகளில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகமாக இருக்கும்போது 1 கிலோ 5 ரூபாய்க்கும், குறைவாக இருக்கும்போது 1 கிலோ 100 ரூபாய் வரையும் இடைத்தரகர்களால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், 'அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையக்கூடிய முருங்கைக்காய், செங்காந்தள் மலர், மலரின் விதைகள் உள்ளிட்டவைகளை மிகக்குறைவான விலைக்கு வாங்கும் இடைத்தரகர்கள், அதனை சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
அதனால், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அவற்றை மதிப்பு கூட்டுப் பொருள்களாக மாற்றி, விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "விவசாயிகளின் கோரிக்கைகள் அடிப்படையில் முருங்கைக்காய் மற்றும் செங்காந்தள் மலர் விவசாயிகளை ஒன்றிணைத்து புதிதாக சங்கத்தை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய நியாயமான விலை கிடைக்க வழி வகை செய்யப்படும். மேலும், அப்பகுதியில் முருங்கைக்காயை மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்றி, பொடியாக விற்பனை செய்யும் விதமாக ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பில் தொழிற்சாலை கட்டப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’விவசாயிகளின் பாதுகாவலராக முதலமைச்சர் திகழ்கிறார்’ - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்