கரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது மக்களிடையே அவர் பேசுகையில், "கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நிச்சயம் நாங்கள் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம். இங்குள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் வாக்குச் சேகரிக்க செல்லும்போது 30 வாகனங்கள் செல்கின்றன.
ஒவ்வொரு வாகனத்திலும் ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் அமர்ந்து செல்கின்றனர். ஆனால் வாக்குச் சேகரிக்கும் இடத்தில் பொதுமக்கள் 30 பேர் மட்டுமே வரவேற்பு அளிக்கின்றனர். வேட்பாளருடன் காரில் செல்லும் நபர்கள், கூட்டம் இருப்பதைப் போன்று புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுவருகின்றனர்.
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் இளங்கோ வாகனத்தின் பின்னால் இரண்டு கார்கள் மட்டுமே செல்கின்றன. பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் விதிமுறையை மீறி பரப்புரை மேற்கொள்வதைக் கண்டுகொள்ளாமல் தேர்தல் அலுவலர்கள் பாரபட்சம் காட்டிவருகின்றனர்.
பாஜக வேட்பாளர் அண்ணாமலை பரப்புரையில் வெளிமாவட்டங்களிலிருந்து மட்டுமல்ல, வெளிமாநிலங்களிலிருந்தும் ஆள்கள் உடன் செல்கின்றனர். இதைத் தேர்தல் அலுவலர்கள் கண்டுகொள்ளவுமில்லை; வழக்கும் பதிவுசெய்யவில்லை. கரூர் தொகுதியில் நான் பரப்புரை செய்யும்போது பறக்கும் படை அலுவலர்கள் இரண்டுக்கு மேற்பட்ட குழுவினர் வந்து காணொலி ஒளிப்பதிவு செய்கின்றனர்.