கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் முருகன்குன்றம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். விசாரணையில் இறந்தவர் சுனாமி காலனி பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ் (24) என்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து, தடயங்கள் இருக்கின்றனவா எனக் காவல் துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, அருகில் இருந்த முள்புதர் நிறைந்த பகுதியில் செல்வின் (24) என்பவர் இறந்த நிலையிலும், ஜெனிஷ் என்ற இளைஞர் படுகாயங்களுடனும் கிடந்தனர்.
இதில், ஜெனிஷை மீட்ட காவல் துறையினர் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், ஜேசுராஜ் மீது ஏற்கனவே கஞ்சா தொடர்பான வழக்குகள் இருப்பது தெரியவந்தது. எனவே, கஞ்சா பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கார் கதவில் கர்நாடக மதுபான பாக்கெட்டுகள் கடத்தல்: நான்கு பேர் கைது