சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் மற்றும் ஹோட்டல்களிலுள்ள மனிதக் கழிவுகள் மற்றும் சாக்கடை நீர், கடந்த 35 ஆண்டுகளாக ரட்சகர் தெரு பகுதி வழியாக கடலில் கலந்து, சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தி வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கடலில் கழிவு நீர் கலப்பால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், அவற்றை சரி செய்யவேண்டும் என்று மீனவ மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுவரை இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.
இந்த நிலையில், கடலில் மனிதக் கழிவுகள் மற்றும் சாக்கடை கலப்பதை கண்டித்து, கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை மீனவ மக்கள் முற்றுகையிட்டு கடந்த சிலநாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி ரதவீதியில் உள்ள லாட்ஜுகளில் இருந்து கடலுக்கு கழிவுநீர் செல்லும் ஓடைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் தலைமையில் குமரி மாவட்ட பேரூராட்சிகளின் 10 செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் உள்ள லாட்ஜின் கழிவுநீர் ஓடையின் குழாய்களை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து ஆய்வு நடத்தினர்.