three arrested for two wheelers adventure on roads கன்னியாகுமரி: சாலையில் ரீல்ஸ் என்ற பெயரில் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்ட இளஞ்சிறார் உள்பட மூன்று பேரின் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இளைஞர்கள் தற்போது பல்வேறு விதமாக தங்களது பொழுதுகளை கழித்து வருகின்றனர். அந்த வகையில், பெற்றோரிடம் அடம் பிடித்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கி, சாலையில் சாகசம் என்ற பெயரில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து, அதனை சமூக வளைதலங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் இந்த விபரீத ரீல்ஸ் சாகசத்தால் பல விபத்துக்கள் நடைபெற்று, பல உயிர் பலியும் நிகழ்கின்றன. மேலும் சாலைகளில் பயணிக்கும் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பிறருக்கும் விபத்துகள் ஏற்பட்டு, உயிர் பலி ஏற்படும் அபாயம் உருவாகிறது.
எனவே, இதனை தடுக்க தமிழகம் முழுவதும் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் கல்லூரி சாலைகளில் இதுபோன்ற ரீல்ஸ் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு சில இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்களது செல்போனில் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனைக் கண்ட போலீசார், இத்தகைய விபரீத ரீல்ஸில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் பூசப்பதட்டு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற ஜெயராஜன் மற்றும் 17 வயது இளைஞர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளையும், கைபேசியில் இருந்த வீடியோக்களையும் பறிமுதல் செய்து, சிறார் உள்பட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களது பெற்றோர்களையும் எச்சரித்தனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கூறுகையில், "பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம், இந்த மாதிரியான அதிபயங்கர சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்கள், காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு, வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும் அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:வேலியே பயிரை மேய்ந்த கதை! ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! போலீசார் கைது!