திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மீட்புப் பணிகள் தோல்வியடைந்தன. குழந்தை சுஜித் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், குழந்தையின் பெற்றோருக்கு பல்வேறு தரப்பினர் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
சுஜித் மரணம் நெஞ்சை அடைக்கிறது இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முத்துமாரி என்பவர் குழந்தை சுஜித் நினைவாக கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனது மகள் நான்கரை வயதில் 2013ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் இறந்துவிட்டார். எனவே ஒரு குழந்தையை இழந்த தகப்பனாக சுஜித்தின் மரணம் என்னை பாதித்துள்ளது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து, பள்ளி வாகனத்தின் ஓட்டையில் விழுந்து குழந்தைகள் இறப்பது என ஒவ்வொரு நிகழ்வுகளின்போதும் அந்தச் சமயத்தில் மட்டும் அதைப்பற்றி நினைக்கிறோம். மக்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நான் வேண்டுகோளாக வைப்பது இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாம் சந்திக்கக் கூடாது. இதற்காக அரசு ஒரு தீர்வு காண வேண்டும். சுஜித் இறந்த இரண்டு ஆண்டில் நாம் மறந்துவிடுவோம்.
எனவே சுஜித் பெயரில் தமிழ்நாடு அரசு ஒரு விருதை அறிவிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் உயிரை பணயம் வைத்து செயல்படுபவர்களுக்கு சுஜித்தின் பெயரால் விருது வழங்க வேண்டும். இதுதான் நாம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்கும். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் மனதிற்குள் பிரார்த்தனை செய்தேன். பிள்ளைகள் பிறந்து, அது இறந்த பிறகு பெற்றோர் படும்பாடு எனக்குத் தெரியும்.
என் மகளின் நினைவால் இத்தனைக் காலம் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். சுஜித்தின் நினைவுகள், இத்தோடு போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் காணொலிப் பதிவு. எத்தனையோ விபத்துகள், கொலைகள், அடிதடிகளைப் பார்த்திருக்கிறேன். உடற்கூறாய்வுகளைப் பார்த்திருக்கிறேன். அவற்றை பணியாகச் செய்திருக்கிறேன். ஆனால், என் மகளின் மறைவிற்குப் பிறகு இந்தச் சம்பவம் என்னை வெகுவாகப் பாதித்துள்ளது.
இந்த நேரத்தில் சிலருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், எம்.பி. ஜோதிமணி ஆகியோரின் அர்ப்பணிப்பைக் கண்டு வியந்துபோனேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, இவர் பேசிய இந்தக் காணொலி பலரது மனதை இறுக்கம் கொள்ளச் செய்துள்ளது.