கன்னியாகுமரி: ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் 675 மீனவர்களை மாவட்டத்திற்கு அழைத்து வர ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த 675 மீனவர்கள் ஈரான் நாட்டில் சிக்கித் தவித்து வருகின்றனர். அந்த நாட்டிலும் கரோனா பரவி வருவதால் மீனவர்களால் அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் அங்கேயே படகுகளில் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அத்தியாவசிய பொருட்களும் இல்லாமல் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் பயனாக வெகு விரைவில் இவர்கள் குமரி திரும்ப உள்ளனர். இவ்வாறு குமரி திரும்பும் மீனவர்கள் எங்கு தங்க வைப்பது அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஈரானில் இருந்து திரும்பும் மீனவர்களுக்கு குமரியில் வைத்து கரோனா பரிசோதனை செய்து அவர்களை பாதுகாப்பாக தங்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.