கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ரயில்வே துறையில் மத்திய அரசின் தவறான முடிவுகளை திரும்பப்பெற வேண்டும் - ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
கன்னியாகுமரி: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் ரயில்வே துறையில் மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளைக் கண்டித்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "கரோனா காலக்கட்டத்தில் 151 பயணிகள் ரயில்களை 100-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தனியாருக்கு டெண்டர் விட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதனை உடனே திரும்பப்பெற வேண்டும். மேலும், சரக்கு ரயில் போக்குவரத்தும் 30 விழுக்காடு தனியாருக்குத் தாரை வார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். அதேபோல், 2011 ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள 78 நாள்கள் போனஸ் திட்டத்தை விட கூடுதலான போனஸ் அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.